சென்னை: நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநகரங்களில் சென்னை முதன்மையாக உள்ளது. சாலை விபத்துகளை குறைக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். குறிப்பாக, தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படும் என்ற திட்டத்தை அமல்படுத்தியதால், சாலை விபத்துகள் கடந்தாண்டு குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதசாரிகள் பல்வேறு இடங்களில் சாலையை கடக்கும்போது ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக வாகன ஓட்டிகள் ஸ்டாப் லைனை முறையாக பயன்படுத்த ஜீரோ வையலன்ஸ் என்ற திட்டம் முதற்கட்டமாக அண்ணா சாலை, திருவான்மியூர், மாதவரம், அடையாறு போன்ற இடங்களில் அமல்படுத்தப்பட்டதாகவும் இந்த நடவடிக்கையினால், கடந்தாண்டு 28 விழுக்காடு உயிர்சேதம் விளைவிக்கும் விபத்துகள் குறைந்துள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.
மேலும், காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், "2019ஆம் ஆண்டு 1,229 விபத்துகள் நடைபெற்ற நிலையில், கடந்தாண்டு விபத்துகளின் எண்ணிக்கை 882ஆக குறைந்துள்ளது. இந்த விபத்துகளில் சிக்கி 859பேர் உயிரிழந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 1,313 பேர் உயிரிழந்தனர். சென்னையில் பாதசாரிகள் சாலைகளை கடக்கும்போது ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 338ஆக இருந்தது. கடந்தாண்டு அது 182ஆக குறைந்துள்ளது. அதேபோல், இருசக்கர வாகன விபத்துகள் 583லிருந்து கடந்தாண்டு 452ஆக குறைந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு உத்தரவு அமல் காரணமாக பொதுமக்கள் வெளியே வராமல் இருந்ததால் சாலை விபத்துகள் குறைந்துள்ளன.
இதையும் படிங்க: ’முதலமைச்சரை மறிப்போம்’ - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!