சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவராக இருக்கும் கே.பி.கே ஜெயக்குமார் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 8 வட்டாரத் தலைவர்களை காரணம் இன்றி பதவி நீக்கம் செய்தனர். இந்நிலையில் அவருக்குச் சாதகமான புதிய நிர்வாகிகளை நியமித்ததாக குற்றம்சாட்டி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில், சத்தியமூர்த்தி பவனில் முற்றுகைப்போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்று கலவரத்தில் முடிந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி அன்று காலை 10:30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளருமான ரூபி மனோகரனுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர். ராமசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதேபோல் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினத் துறைத் தலைவர் ரஞ்சன் குமார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரஞ்சன் குமாரும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை அளிக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று சத்தியமூர்த்தி பவனில் 68 மாவட்டத் தலைவர்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கையொப்பமிட்டு தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எஸ்-எஸ்டிகளுக்கான காலி பின்னடைவுப் பணியிடங்களை போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்ப தடை கோரி வழக்கு!