சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் மருத்துவம் சார்ந்த மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று (ஜன.27) முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று (ஜன.28) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதில் தர்மபுரியைச் சேர்ந்த 61 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் கே.சிவபிரகாசத்துக்கு மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அவர், இன்று நடைபெற்ற கலந்தாய்வில் தனது மாணவர் ஒருவருடன் அவரும் பங்கேற்றார்.
இந்நிலையில், ஈடிவி பாரத்திறகு பேட்டியளித்த அவர், "தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 64 வயதான கிஷோர் என்பவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன்.
இது மட்டும் இல்லாமல் பல்வேறு மாணவர்களுக்கு நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சி அளித்து உள்ளேன். நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்கு சிறப்பு வகுப்பிற்கு எதுவும் செல்லவில்லை. என்னுடைய பாடம் நடத்தும் அனுபவத்தைக் கொண்டு இதில் தேர்ச்சி பெற்றேன். முதுகலை ஆசிரியராக 13 ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளேன்.
இந்த ஓய்வுக் காலத்தில் இதுபோன்று படிப்பைப் படிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இந்த கலந்தாய்வு வந்ததற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 7.5 இட ஒதுக்கீட்டின் மூலம் எனக்கு இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அரசுப்பள்ளியில் படித்தவர் என்னும் நிலையில் சிவபிரகாசத்துக்கு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், தரவரிசையில் 249ஆவது இடம்கிடைத்திருந்தாலும், கலந்தாய்வில் பங்கேற்ற அவர் தன்னுடைய இடத்தை தேர்வு செய்யவில்லை. இதன்மூலம் அவரது சீட், மற்றொரு அரசுப்பள்ளி மாணவருக்கு கிடைத்துள்ளது.