சென்னை: தமிழகத்தில் 15 அரசு சட்டக் கல்லூரிகளும், 9 தனியார் சட்டக் கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வரும் நிலையில், 11 தனியார் சட்டக் கல்லூரிகள் துவங்க அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளை முறைப்படுத்த 2018-ஆம் ஆண்டு அரசு இயற்றிய சட்டத்தில் அரசு சட்டக்கல்லூரிகள் உள்ள மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் செயல்பட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம், சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் துவங்க மறைமுகமாக சட்ட அனுமதி வழங்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் சட்டக் கல்லூரிகள் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுவதில்லை என்றும், ஏழை மற்றும் விளிம்பு நிலை மாணவர்கள் குறைந்த செலவில் சட்டக் கல்வியை பெறமுடியாத நிலை ஏற்படும் எனவும், பணம் மட்டுமே முக்கிய நோக்கமாக செயல்படும் என்பதால் சட்டக் கல்வியின் தரம் தாழ்ந்து விடும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை விடுத்து, சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு புதிதாக கல்லூரிகள் துவங்கவும், புதிதாக தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க அரசுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.