தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பசுபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதியை சண்முகத்தை இடைக்கால நிர்வாகியாக நியமித்தது. ஆனால் அவர் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி பல்வேறு பொய்யான காரணங்களை கூறி நீதிமன்றத்தின் மூலம் அறக்கட்டளையின் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்திற்கு புறம்பாக அறக்கட்டளை நிர்வாகிகள் இல்லாத நிலையில், விதிகளுக்குப் புறம்பாக தனக்கு சாதகமான முறையில் கல்லூரிக் குழுவை மாற்றி அமைத்துள்ளார்.
மாணவர் நலன் சார்ந்த நடவடிக்கை எனக்கூறும் இடைக்கால நிர்வாகி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி மற்றும் பள்ளிகளில் எந்தவிதமான உட்கட்டமைப்புகளையும் மேம்படுத்தாமல் தொடர்ந்து ஆசிரியர்களை தரமற்றவர்கள் எனக் கூறி வருகிறார். இதனால் மாணவர் சேர்க்கை 30 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்திற்கு புறம்பாக 152 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார். பெரும்பாலான ஆசிரியர்கள் சொந்த ஊரில் இருந்தபோதும் பதிலளிக்க கால அவகாசம் வழங்காமல் 105 ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை அவர் திரும்ப பெற வேண்டும்.
உச்ச நீதிமன்றம் அறக்கட்டளையின் கீழ் உள்ள நான்கு கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனம் தொடர்பாக தடை வழங்கியுள்ளது. ஆனால் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மீறி முருககூத்தன் என்பவர் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் செல்லம்மாள் கல்லூரி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் விதிகளுக்கு புறம்பாக பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமித்துள்ளார். அவர்களை நீக்கிவிட்டு பணியில் மூத்த பேராசிரியர்களை பொறுப்பு முதல்வராக நியமனம் செய்ய வேண்டும்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளால் ஆசிரியர்கள் நீதிமன்றத்திற்கு அலைகின்றனர். எனவே அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசு பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க அலுவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடரும் சாதிய கொடூரம்: மாற்றத்தை கொண்டுவர ராகுல் காந்தி கோரிக்கை