சென்னை: பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் எப்போது வழங்கப்படும் என்பதை அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து உழைப்பு சுரண்டலில் ஈடுபடக்கூடாது என மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திக்கு சிறப்பு பேட்டியளித்தார். அதில், கல்வி கொடுக்கக்கூடிய நிறுவனங்களில் முக்கியமானவர்கள் ஆசிரியர்கள். உலகம் முழுவதும் கல்வி முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாடு அதற்கு விதிவிலக்கல்ல. அரசும் கல்விக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. கல்வி குறித்து மிகப்பெரிய புரிதல் இருப்பது போல், பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்க வைத்து வருகின்றனர். ஆனால், இங்கு ஆசிரியர்கள் எவ்வாறு நடததப்படுகின்றனர் என்பதை யாரும் யோசிக்கிறோமா? என்றால், இல்லை என்பதே உண்மை.
10 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நிரந்தர ஆசிரியர்கள் என்பது குறைந்துக் கொண்டே வருகின்றனர். கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு பள்ளிகளில் 16,540 ஆசிரியர்களை 2012 ஆம் ஆண்டு நியமித்த அரசு ஆணையானது, அவர்களைப் பகுதி நேர ஆசிரியர்களாக வரையறை செய்தது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும் 5 ஆயிரத்தில் ஆரம்பித்த அவர்களது ஊதியம் இன்று பத்தாயிரத்தை தாண்டவில்லை. ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வேண்டும் என பல்வேறுப் போராட்டங்களை நடத்தியும் இன்னும் பணி நிரந்தரம் செய்யபடவில்லை. மேலும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளமும் கிடையாது. பதினோரு மாதங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், பல ஆசிரியர்கள் அவர்களின் குடும்பத்திற்கான வருமானம் ஈட்ட முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
20 ஆண்டுகள் அனுபவத்திற்கு 20 ஆயிரம் ஊதியம்: பள்ளிகளில் தான் இப்படி என்றால் கல்லூரிகளிலும் இதே நிலை நீடிக்கின்றது. ஒப்பந்த ஆசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் அரசு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கூட நிரந்தரமற்ற ஆசிரியர்களை நியமித்துள்ள நடைமுறையே பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அவர்கள், தோராயமாக 7300 பேர் தற்காலிகப் பணியிடத்தில் பணியாற்றுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. அவர்களது கல்வித்தரம் உயர்வாக இருந்தாலும் கூட அவர்களுக்கான ஊதியம் வெறும் 20 ஆயிரம் தான் என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, ஒரு பெண் கல்லூரி விரிவுரையாளர் கூறுகையில், 2004ஆம் ஆண்டு முதல் 20 வருடங்களாக இன்னும் ஒப்பந்த ஆசிரியராகவே பணியாற்றுகிறேன். முதலில் 4000 முதல் ஊதியத்திற்கு வந்து தற்போது 20,000 வரை மட்டுமே என்னுடைய ஊதியம் உயர்ந்திருக்கிறது. 45 வயது கடந்தும் நாங்கள் எல்லா தேர்வுகளை எழுதியும் கூட எங்களுக்கான இடத்தை அரசு தரவே இல்லை என்கிறார்.
பகுதி நேர ஆசிரியர்கள் படும் துன்பத்தைப் போலவே கல்லூரிகளில் பணியாற்ற கூடிய இந்த ஒப்பந்த ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல 20 ஆண்டு காலமாக அதே நிலையில் இருப்பது இந்த சமூகத்தின் அவமானம். எனவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!