சென்னையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட் இன்று (பிப்.17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தொடக்க கல்வித் துறையில் 2004 ஆம் ஆண்டு முதல் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு, மாநகராட்சி பள்ளிகளில் நியமிக்கப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தொடக்க கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.
இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் அனுபவம், கல்வித் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து விழுக்காடு உள் ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தொடக்கக் கல்விதுறை இயக்குநர் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், பள்ளிக் கல்வி இயக்குநர் இரண்டு வார காலத்திற்குள் தனது பரிந்துரைகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் இரண்டு வாரத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அரசாணை வெளியிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எனவே கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பாடத்திட்டத்தை வெளியிடும் முன் ஆசிரியர்களிடமும் கருத்து கேட்கக் கோரிக்கை!