கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர தமிழ்நாட்டில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் விமானங்களை இயக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதால், வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ’வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுவதாகவும், தமிழ்நாடு அரசு, விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், சர்வதேச விமான சேவைகளுக்கு தமிழ்நாடு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஜூன் 15ஆம் தேதி வரை அமெரிக்கா, குவைத், மலேஷியா உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து, 61 விமானங்கள் மூலம், ஒன்பதாயிரத்து 625 தமிழர்கள் மாநிலத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்கள் மூலம் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வெளி நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் வகையில் மாநில விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை செயலரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை (status report) தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஜூலை இரண்டு) ஒத்தி வைத்தனர்.