சென்னை: புகழ்பெற்ற மிருதங்க இசைக்கலைஞர் காரைக்குடி மணி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் செப்டம்பர் பதினொன்றாம் தேதி 1945ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது முதலே இவருக்கு இசையில் அதிக அளவில் ஆர்வம் இருந்தது. இதன் தொடர்ச்சியாக காரைக்குடி ரெங்கு ஐயங்கார், டி. ஆர். ஹரி ஹர சர்மா மற்றும் கே.எம்.வைத்யநாதன் ஆகியோரிடம் மிருதங்க இசைக் கற்றார்.
தனது எட்டாவது வயதில், காரைக்குடியில் தனது முதல் மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார். மேலும் தனது 18ஆவது வயதில் 'தேசிய விருதினை' அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடமிருந்து பெற்றார்.
கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்ற தா.கி. பட்டம்மாள், செம்மங்குடி சீனிவாச ஐயர், லால்குடி ஜெயராமன், மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, மதுரை எஸ். சோமசுந்தரம், செம்பை வைத்தியநாத பாகவதர் உள்ளிட்ட இசைக்கலைஞர்களுக்கு இவர் மிருதங்கம் வாசித்துள்ளார்.
அதுமட்டுமின்றி 1989ஆம் ஆண்டில் 'ஸ்ருதி லய கேந்திரா' எனும் இசைப் பள்ளியை சென்னை, ரங்கராஜபுரத்தில் துவக்கினார். இப்பள்ளியின் கிளைகள் தற்போது ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், நேரடியாகவோ மறைமுகமாகவோ இப்பள்ளிகளின் மூலம் மிருதங்க இசையைக் கற்றுள்ளனர்.
இசையுலகில் பெருமைக்குரிய காரைக்குடி மணி, கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று மயிலாப்பூரில் உள்ள தனது இல்லத்தில் 77ஆவது வயதில் காலமானார்.
இவரது மறைவுக்கு இசை ஆர்வலர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் சம்பளம் தராததால் கேஸ் கம்பெனிக்கு தீ வைத்து தப்பியோடிய நபர் கைது!