தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு பரவத்தொடங்கியதிலிருந்து பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகினர். அதில் ஒரு பகுதியாக சென்னையில் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் நடத்துவதற்காக அனுமதிகள் பெற முடியவில்லை என்பது ஒன்றாகும்.
சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை நிர்வாகத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75 ஆயிரம் கடைகளுக்கு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி வழங்கப்படும். இவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுவது வழக்கம். கரோனா தொற்று ஏற்பட்டது முதல் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செயல்படாமல் இருந்து வந்தது.
பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இயங்கி வந்த வணிக நிறுவனங்கள் சார்பாக செயல்படாமல் இருந்த காரணங்களால், கடைகளின் உரிமங்களை புதுப்பிப்பதற்கான தொகையையும் தாமதக்கட்டணத்திற்கான தொகையையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலரிடம் கேட்டபோது, "ஊரடங்கு சமயத்தில் கடைகள் பெருமளவில் திறக்கப்படவில்லை என்பதால் வியாபாரிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தாமதமின்று வருகிற செப். 30ஆம் தேதிக்குள் தங்களின் கடைகளுக்கான உரிமங்களை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குறிப்பிட்ட தேதிக்குள் உரிமங்களை புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார். ஆனால், கடை உரிமையாளர்கள் தரப்பில் வேறு மாதிரியான கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
இதுதொடர்பாக பேசிய உணவக மற்றும் விடுதி அசோசியேஷன் நிர்வாகி ரவி கூறுகையில், "மார்ச் மாதம் முதலாகவே சென்னையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் கடை உரிமையாளர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லை என்பதை அரசு உணர்ந்துள்ளது. கடைகளின் வாடகை மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாமல், பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் கடைக்காரர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, கரோனா தொற்று காலம் முதல் ஆறு மாதங்களுக்கு உரிமம் பெறுவதற்கான தொகையை சென்னை மாநகராட்சியே பாதியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
மாறாக தாமதக் கட்டணத்தை மட்டுமே ரத்து செய்வதால் எந்தப் பலனும் இல்லை. செயல்படாத கடைகளுக்கான உரிமம் புதுப்பிக்கக் கட்டணம் செலுத்த இயலாத நிலையில், கடையின் உரிமையாளர்கள் இருக்கின்றனர். மேலும், கரோனா காலம் முதல் கடைகளுக்கான சொத்து வரியையும் ரத்து செய்ய மாநகராட்சி முன் வர வேண்டும். அப்போது தான் தொடர்ந்து கடைகளை நடத்தும் நிலை ஏற்படும்" என்கிறார்.
தற்போது வரை சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கான உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்ற நிலையில், மாநகராட்சி வழங்கியுள்ள காலக்கெடுவிற்குள் உரிமங்களை தாமதக் கட்டணங்கள் இல்லாமல் புதுப்பித்துக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஆறு மாதங்களுக்கான உரிமம் புதுப்பிக்கும் கட்டணத்தைப் பாதியாக ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சென்னை மாநகராட்சி கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்பது கடை உரிமையாளர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் பேச முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பணப்பிரச்னை; நண்பரின் கடைக்கு தீ வைத்த நண்பருக்கு வலைவீச்சு!