மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்குக்கு திரையுலத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்த வகையில், இலங்கையைத் தமிழரான கானா பிரபா என்பவர் பகிர்ந்துள்ள இரங்கல் செய்தி அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில், “இயக்குநர் சிகரத்தின் வழியான அறிமுகம்தான், ஆனால் அதற்குப் பின்னான பயணத்தில், பத்தோடு பதினொன்றாக கவனிக்கப்படாத துணை நடிகர் கூட்டத்திலும்கூட ஒருவராக இருந்து, ஒரு திருப்புமுனை வரை காத்திருந்து அந்த நம்பிக்கையை பலிக்க வைத்தவர். தான் கடந்து வந்த பாதையைப் போல் பின்னாளில் துணை நடிகர் கூட்டத்துகே ஒரு அடையாளத்தை நிறுவியவர். அதனால்தான் மயில்சாமி God Father என்று இவரை வாயாரப் புகழ்வார்.
’புதுப்புது அர்த்தங்கள்’ காலத்திலேயே (மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும்) ஊன்றிக் கவனித்து ரசித்த நகைச்சுவை நடிகன், போன வாரம் வரை ’தூள்’ படத்தின் விவேக் நகைச்சுவைப் பகுதியைப் போட்டுப் பார்ப்பதில் ஒரு மன நிறைவு.
’படிக்காதவன்’ படத்தின் பயந்தாங்குளி ரவுடி அப்படியே ’தலைநகரம்’ வடிவேலுக்கு நேரெதிர். இரண்டுமே ரசித்து சிரிக்க வைத்த பாத்திரப் படைப்புகள். சம காலத்தில் இயங்கிய இரண்டு பெரும் நகைச்சுவை நட்சத்திரங்கள் எப்படி தம் அடையாளத்தை நிறுவலாம் என்பதற்கான ஒரு சோறு உதாரணம் இது.
இம்மட்டுக்கும் கல்வி வளர்த்ததோடு தான் திரைத்துறைக்கே வந்தவர். எப்படி கவுண்டமணி, செந்தில் காலத்தில் ஜனகராஜுக்கான இடம் இருந்ததோ, அது போலவே வடிவேலு காலத்திலும் விவேக்கின் பங்கு.
ஜனங்களின் கலைஞனின் இழப்பை ஏற்க மறுக்கிறது மனம், இன்னும் பல்லாண்டு இருந்திருக்கலாமே என்று ஏங்க வைத்துப் பிரிந்தவர், கூட்டத்தில் இன்னொருவர் ஆகி விட்டார்.
இதையும் படிங்க: ’கருணாநிதியால் ’சின்னக் கலைவாணர்’ என பட்டம் சூட்டப்பட்டவர்’ - திமுக தலைவர்கள் நேரில் அஞ்சலி