சென்னை: தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் எம். ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,
'சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, வனம், வன உயிரின குற்றங்கள் பிரிவு) மிடா பானர்ஜி பதவி உயர்வு பெற்று, முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக (ஆராய்ச்சி மற்றும் கல்வி) நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் பி.ராஜேஸ்வரி, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக (பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, வனம், வன உயிரின குற்றங்கள் பிரிவு) மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் ஏ.உதயன், வண்டலூரில் உள்ள நவீன வன உயிரின பாதுகாப்பு நிலைய இயக்குநராக மாற்றப்பட்டு; சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சிறப்புச்செயலாளர் எம்.ஜெயந்தி (சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்), தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் வனப்பாதுகாவலர் தீபக் எஸ்.பில்கி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல வனப்பாதுகாவலர் மற்றும் சுற்றுச்சூழல் கூடுதல் இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை திட்ட இயக்குநர் பி.சி.அர்ச்சனா கல்யாணி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சிறப்புச் செயலாளராக (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்) நியமிக்கப்பட்டார்.
வண்டலூர் நவீன வன உயிரினப் பாதுகாப்பு நிலைய இயக்குநர் சேவா சிங், தமிழ்நாடு வனப்பயிற்சி நிலைய (கோவை) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வண்டலூர் பூங்கா ஒப்பந்த ஊழியர்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது - ராமதாஸ் அறிக்கை!