சென்னை: 2019ஆம் ஆண்டு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ், அவரது குடும்பத்தினரை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்துவைத்து, சொத்துகளை அபகரித்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தொழிலதிபர் கடத்தல், சொத்துகள் அபகரித்த விவகாரத்தில் தொடர்புடைய திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், மூன்று காவலர்கள், ஆந்திர தொழிலதிபர் உள்பட 10 பேர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் துறை அலுவலர்கள் உள்பட மீதமுள்ள ஒன்பது பேரும் தலைமறைவாகி இருப்பதாகவும், முன் பிணை கோரி நீதிமன்றத்தை நாடிவருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆந்திர தொழிலதிபரைத் தேடி சிபிசிஐடி காவல் துறையின் தனிப்படை ஆந்திராவிலும் சோதனை மேற்கொண்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆகஸ்டு மாதம் திருமங்கலம் உதவி ஆணையர் சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர்.
குறிப்பாக சென்னை முகலிவாக்கம், மதுரை உசிலம்பட்டியிலுள்ள அவரது வீடுகளில் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் உதவி ஆணையருக்குச் சொந்தமான கொடைக்கானல் வீட்டிலும் சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்குப் பணியாற்றிவந்த ஊழியரான தனபால் என்பவரைப் பிடித்து சென்னை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு உதவி செய்ததாக தனபாலை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்து பிணையில் விடுவித்தனர்.
இதையும் படிங்க: சிலை கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனனாக உள்ள சிங்கை வாழ் தமிழன் விஜய் குமார்!