சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, பல்மருத்துக்கல்லூரி, இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைத் தேர்வு செய்வதற்கு 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் ஆகஸ்ட் 1, 2 ஆகியத் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்துகொண்டு, 4-ம் தேதி முதல் 8-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 – 2024-ம் ஆண்டின் இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகியப் படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரையில் பெறப்பட்டன.
அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கு 3,042 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 16-ம் தேதி வெளியிடப்பட்டது.
2023-24ஆம் ஆண்டிற்கான அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் 6,326 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பில் 1,768 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
இந்த நிலையில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையில் தரவரிசை எண் 1 முதல் 25,856 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் பங்கேற்றலாம்.
அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13,179 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பங்கேற்றலாம்.
இவர்களுக்கான இடங்கள் ஆகஸ்ட் 1, 2 ஆகியத் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3-ஆம் தேதி கல்லூரியின் இடங்கள் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மாணவர்கள் விண்ணப்பப்பதிவு கட்டணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 500 ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1000 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் வைப்புத்தொகையாக மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, மாநில தனியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றிக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக ரூ.30,000 செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் 1 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். கலந்தாய்வு, கல்லூரிகளின் விவரங்கள் மற்றும் கட்டண விவரம் www.tnhealth,tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.