சென்னை: திமுக ஆட்சியிலிருந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமைச்சராக இருந்தவர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி. இவர் தனது தந்தை மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோரின் துணையோடு செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாகச் செம்மண் எடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம் சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடி முன்ஜாமீன் கோரி வழக்குத் தொடர்ந்தார். ஆனால், இந்த வழக்கில் மேலும் பல குவாரிகள் பொன்முடி மற்றும் அவரது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
காவல்துறையின் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட பொன்முடி தொடர்புடைய சதானந்தம் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் பல ஆவணங்கள் சிக்கியதை அடுத்து, சதானந்தம் மற்றும் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி ஆகியோர் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். தொடர்ந்து, செம்மண் கொள்ளை வழக்கில் கடந்த 2012ம் ஆண்டு அதிரடியாக பொன்முடி கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையிலிருந்து வரும் சூழலில், இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குவாரி ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது காவல்துறை சமர்ப்பித்த ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், காவல்துறை ஆவணங்களில் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது எனவும் நீதிபதி தெரிவித்தார். இதனால், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி, வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறி, கவுதம சிகாமணியின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!