சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் நாளுக்கு நாள் கரோனா தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். இந்நிலையில், சங்கர் நகர் காவல் நிலையத்தில் நான்கு பேருக்கும், விமான நிலைய காவல் நிலையத்தில் இருவருக்கும், பல்லாவரம் காவல்நிலையத்தில் ஒருவருக்கும் என 8 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஒரு மாதம் கழித்து கரோனாவில் இருந்து மீண்ட இவர்கள் இன்று (ஜூலை 4) பணிக்கு திரும்புகின்றனர். பெருந்தொற்றான கரோனாவிலிருந்து மீண்ட இக்காவலர்களுக்கு காவல் நிலையங்களில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சிவப்பு கம்பளத்தில் கம்பீரமாக நடந்து வரும் காவலர்கள் மீது பூக்கள் தூவப்பட்டன. பின்னர் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பரங்கிமலை மாவட்ட காவல் துணை ஆணையாளர் பிரபாகரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், சால்வை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், காவல் துணை ஆணையாளர் பிரபாகரன், ‘அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், இதனால் நாம் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். பிறரையும் காக்க முடியும்’ என அறிவுரை கூறினார்.
இதையும் படிங்க: பசியால் வாடும் மக்களுக்கு உதவும் லவ் பண்டல்!