சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துவிட்டது என அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (அக் 04) சேலத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இந்த கூட்டணி முறிவு என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவல்ல, ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களுடைய முடிவு" என கூறியிருந்தார்.
தேர்தல் கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக ஒரு பக்கம் கூறி வர, மீண்டும் கூட்டணி தொடருமா மற்றும் தேர்தலுக்கான அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில், மாநிலத் தலைவர் இல்லாமல் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், தமிழக பாஜக துணைத்தலைவர், அமைப்புச் செயலாளர்கள் என பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணித் தலைவரான வானதி சீனிவாசன் இன்றைய (அக் 04) செய்தியாளர் சந்திப்பில், "என்னது நேற்று கமலாலயத்தில் கூட்டம் நடைபெற்றதா? என்ன கூட்டம்? எனக்குத் தெரியாதே" என ஆச்சரியத்துடன் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துவிட்டு, "பாஜக-வின் ஒவ்வொரு நகர்வுகளையும் வெளிப்படையாக ஊடகங்களுக்குக் கூறுவோம்" என தெரிவித்த வானதி சீனிவாசன், அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு மட்டும் பதிலளிக்காமல் அங்கிருந்து சிரித்தபடியே நகர்ந்து சென்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, நேற்று (அக் 03) கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, "அனைவரும் மகிழ்ச்சியடையும் முடிவு வெளியாகும். அதற்காகத்தான் பெரியவர்கள் எல்லாம் பேசி வருகிறார்கள்" என தெரிவித்த அவர், "கூட்டணி நிச்சயமாகத் தொடரும்" என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் குழப்பத்தைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறும்போது, "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய பலத்தை நிரூபிக்கவே டெல்லி சென்று தேசியத் தலைமைகளைச் சந்தித்துள்ளார். மேலும், அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு விளக்கம் அளிக்கச் செல்லவில்லை எனவும், குறிப்பாக தேர்தல் கூட்டணி முடிவுகளை எல்லாம் தேசிய தலைமை எடுக்கும். அதுவரை தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பார், அதற்கு பிறகும் நீடிப்பார்" என அவர் கூறினார்.
மேலும், நேற்று (அக் 03) கமலாலயத்தில் நடைபெற்ற கூட்டமெல்லாம் அண்ணாமலைக்கு ஒரு பொருட்டே அல்ல என்று கூறிய அவர், கொள்கை அடிப்படையிலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்றும் ஒரே புள்ளியில்தான் இருக்கிறார்கள்.
அதில் எந்தவித மாற்றுக் கருத்தோ அல்லது கருத்து வேறுபாடோ எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. இங்கு இரண்டு கட்சிகளுக்குமே பிரச்னை தொகுதிப் பங்கீடுதான். இது இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும்தான் இருக்கும். அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு கண்டிப்பாக இந்த கூட்டணி தொடரும். அதிலும் எந்த வித மாற்றமும் இல்லை" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு; நாளை அண்ணாமலை ஆஜராக உத்தரவு!