சென்னை:உடல் உறுப்பு மாற்றச் சிகிச்சையில் தானம் அளிப்பவரின் ரத்த வகையும் தானம் பெறுபவரின் ரத்த வகையும் ஒரே வகையானது இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
இந்நிலையில் மரபணு ஒற்றுமை இருப்பின் ரத்த வகை ஒற்றுமை தேவையில்லை எனக் காவேரி மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞருக்குச் சிறுநீரகம் செயலிழந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
தலைமை சிறுநீரகவியல் மருத்துவர் பாலசுப்பிரமணியம்
இளைஞனைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனையின் தலைமை சிறுநீரக மருத்துவர் ஆர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், 'நோயாளியின் பரிசோதனையின் அடிப்படையில் உடனடியாக சிறுநீரக மாற்றம் செய்ய வேண்டி இருந்தது.
இதனடிப்படையில் நோயாளியின் உறவினர்களைச் சோதித்துப் பார்த்தோம். அதில் இளைஞனின் தாயார் தகுதி உடைய கொடையாளியாகக் கண்டறியப்பட்டார். இருப்பினும், இருவரின் ரத்த வகையும் வெவ்வேறாக இருந்தன.
இளைஞனின் ரத்தம் B வகையாகவும், அவனின் தாயாரது ரத்தம் AB வகையாகவும் இருந்தது. இதனால் இருவரின் உறுப்பு மாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டது. உறுப்பு மாற்றுச்சிகிச்சையில் ரத்த வகை முக்கியமானது. மாறுபட்ட ரத்த வகைகள் எதிரான ஆன்டிபாடிகளைக் கொண்டிருக்கும்.
உடனடி உறுப்பு நிராகரிப்புக்கு வாய்ப்பு
மாறுபட்ட ரத்த வகை உடைய உறுப்பை மாற்றும்போது அதன் ஆன்டிபாடிகள் எதிர்வினையாற்றுவதால் உறுப்பை நிராகரிப்பு செய்யும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அறுவை சிகிச்சைப் பயனளிக்காமல் போகும்.
இந்நிலையில் இவர்களது ரத்தவகை மாறுபட்டாலும் இருவரது மரபணு வகை 100% ஒத்துக்காணப்பட்டது. குழந்தைகளின் ஆன்டிஜென்களின் ஆறில் மூன்று தந்தையுடையதும் மூன்று தாயுடையதுமாக இருக்கும். ஆனால், இந்த இளைஞனின் உடலில் உள்ள 6 ஆன்டிஜென்களும் தாயுடன் ஒத்துக்காணப்பட்டது. எனவே, இந்த அறுவை சிகிச்சை எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்றது’ என்று கூறினார்.
இந்த அறுவை சிகிச்சையானது மருத்துவ வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 77% பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்