சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெடிகுண்டு, வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை விரைந்து கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக மோப்ப நாய் ‘ராணி’யை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், கடந்த 10 ஆண்டுகள் 6 மாதங்கள் வரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வந்தனர்.
இந்த ராணி என்ற நாய், விமான நிலையத்தில் துல்லியமாக மோப்ப சக்தியுடன் வெடிபொருட்களை கண்டுபிடிக்கக்கூடிய திறனுடையது. மேலும் பல அலுவலர்களிடம் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த பத்து வருடங்களாக பணிபுரிந்து வந்த ராணி மோப்ப நாயின் வெற்றி பயணம் நேற்று (ஆகஸ்ட் 4) முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் ராணி மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மோப்ப நாய் ராணிக்கு பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் கேக் வெட்டி, சிவப்பு கம்பள மரியாதைகளும் செய்யப்பட்டன. பின்னர் ராணி மோப்ப நாயை காவலர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வாகனத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்று மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய இயக்குனர் ஷரத்குமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி ஸ்ரீராம், கால்நடை மருத்துவர் பரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி ஸ்ரீராம் கூறுகையில், “சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் தற்போது ஒன்பது மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. 10 வருடங்கள் ஆறு மாதங்கள் பணி செய்து இன்று ராணி என்கிற மோப்ப நாய் ஓய்வு பெற்றது. மேலும் இரண்டு மோப்ப நாய்கள் பயிற்சி பெற்று வருகின்றன.
அவைகள் வரும் நவம்பர் மாதத்தில் பயிற்சி முடித்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் சேர உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது திறக்கப்பட உள்ளதால், கூடுதலான பாதுகாப்பு தேவைப்படுகிறது.
விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் தற்போது 8 மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. மேலும் கூடுதலாக 8 மோப்ப நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது. பாதுகாப்பு பணியில் மோப்ப நாய்களின் பங்கு மிக முக்கியமானது. பயணிகளின் உடைமைகளில் ஏதாவது வெடி பொருட்கள் உள்ளதா என்பதை சோதனை செய்ய மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிக்கிறது” என தெரிவித்தார்.
இதனையடுத்து, விமான நிலைய இயக்குனர் ஷரத்குமார், “சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராணி என்கிற மோப் நாய் ஓய்வு பெறுகிறது. இது ஒரு உணர்ச்சிகரமான நாள். விமான நிலையத்தில் பாதுகாப்பு பணி என்பது, மிக முக்கியமான ஒன்று.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலைய பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதில் மோப்ப நாய்களின் பங்கு மிக முக்கியமானதாகும். மோப்ப நாய்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் பணி முடித்து ஓய்வு பெற்ற பின், அந்த இடத்திற்கு வேறு மோப்ப நாய்களை பணியில் அமர்த்துவோம்.
சென்னை விமான நிலையத்தில் கட்டப்படும் வரும் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் மற்றும் மல்டி லெவல் கார் பார்க்கிங் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங் திறக்கப்படவுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் மக்கள் எந்த ஒரு சிரமமின்றி பயணத்தை மேற்கொள்வார்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்து மோப்ப நாய் ராணியை பராமரித்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் முத்துக்குமார் கூறுகையில், “சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ராணி என்கிற மோப்ப நாய், கடந்த 10 ஆண்டுகளாக மிகச் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளது.
மோப்ப நாய் ராணி ஓய்வு பெற்றது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அலுவலர்களுடன் ஆலோசித்து மோப்ப நாய் ராணியை நானே தத்தெடுத்துக்கொள்ள உள்ளேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமானநிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிக்கட்டு - முதலமைச்சர் ஸ்டாலின்!