சென்னை: தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் வரும் 29-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலங்கள் நிறைவடைய உள்ளன.
தற்போதைய சூழலில் திமுக 4 எம்.பி. பதவிகளையும், அதிமுக 2 எம்.பி. பதவிகளையும் கிடைக்கும். மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று(மே 15) வெளியிட்டார்.
அதில், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் கிரிராஜன், நாமக்கல் திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மாநில ஊடகப் பிரிவு தலைவரும், செய்தித் தொடர்பாளருமான கோபண்ணா ஆகிய மூன்று பேரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை மாநில காங்கிரஸ் தலைவராகப் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்மையில் தெரிவித்தார். அதனால் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ராஜ்யசபா இடங்களை திமுகவிடம் கேட்போம்-சொல்கிறார் கே.எஸ்.அழகிரி