சென்னை துறைமுகத்தில் கடலோர காவல் படையின் வராஹா ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் கிருஷ்ணசாமி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது நாட்டில் நீண்ட காலமாக கடலோரக் காவல்படை இருந்து வந்ததாகவும், சிந்து சமவெளி காலத்திலிருந்து இந்தியாவில் கடற்படை உள்ளதாகவும் கூறினார்.
அதேபோல், கடல்கள் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்று கூறிய அவர், அதே அளவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தலும் இருப்பதாகக் கூறியுள்ளார்.
பாலக்கோட்டில் மீண்டும் பயங்கரவாத முகாம் செயல்படுவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘கவலைப்பட வேண்டாம். நமது பாதுகாப்புப் படை தயார் நிலையில் உள்ளது’ என ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.