கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதனை கரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சோதனை முறையில் சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து உரிய அனுமதிகள் பெற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 26 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு இதுவரை 24 நபர்கள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிளாஸ்மா வங்கி அமைப்பதற்காக ரூ.2.34 கோடி செலவில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் நிறுவப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 7 நபர்கள் வரை பிளாஸ்மா தானம் அளிக்க இயலும். தானமாகப் பெறப்பட்ட பிளாஸ்மா செல்களை 40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் வைத்து முறையாக பாதுகாப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பாதுகாக்கப்பட்ட பிளாஸ்மாவை ஓராண்டு வரை சேமித்து வைத்து கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். தகுதியான கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படுகிறது. இதற்கு அதிகபட்சமாக 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்த 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர் ஆவர்.
உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது. ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 14 நாட்கள் இடைவெளி விட்டு 2-வது முறை தானம் அளிக்கலாம். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த சிகிச்சை விரிவுபடுத்தப்படும்.
கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க தகுதியானவர்கள், எவ்வித தயக்கமும் பயமும் இல்லாமல் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்து இதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும்: தமிழிசை வேண்டுகோள்!