சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருதயம், எலும்புசிகிச்சை, நரம்பியல், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், சிறுநீரகம், கல்லீரல் உள்பட பல்வேறு சிறப்புத் துறைகள் இயங்கி வருகின்றன.
இந்த மருத்துவமனைக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்வார்கள். 3, 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளி நோயாளிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது. அதேபோல் சுமார் 350 உள்நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா சிறப்பு வார்டில் சுமார் 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இருதயவியல் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் 34 வயது முதுகலை மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த மருத்துவர் வார்டில் பணிபுரிந்த சிலருக்கும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி கூறுகையில், "இருதவியல் பிரிவில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இருதயவியல் பிரிவில் இருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: மன அழுத்த பாதிப்பு: அழைப்புதவி எண்ணை அறிமுகப்படுத்திய சென்னை மாநகராட்சி