சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இருந்து வருகிறார். இந்தப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான பட்டங்களை வேந்தர் தான் வழங்க வேண்டும். பட்டங்களை நேரடியாக பெற விரும்பும் மாணவர்கள் பட்டங்களை நேரடியாக பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா
அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாணவர்களில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று, பதகங்களை பெறும் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினரும், பல்கலைக்கழங்களின் வேந்தரும் வழங்குவர். பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழங்களில் படித்த மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் பட்டம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இது குறித்து பல்கலைக்கழகங்களின் இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கூறும்போது, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் கடந்த 2 ஆண்டு காலமாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதன் காரணமாக கல்லூரிகளில் படித்து முடித்த 9 லட்சத்து 26 ஆயிரத்து 542 மேற்பட்ட மாணவர்கள் பட்ட சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக ஆளுநர் தேதி தராதது தான் இதற்கு காரணம் எனவும், இதனால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். பட்டமளிப்பு விழாவில் வட இந்தியாவைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை அழைக்க ஆளுநர் விரும்புவதாகவும், அதே நேரத்தில் மத்திய அமைச்சர்கள் தேதி கிடைக்காததன் காரணமாக பட்டமளிப்பு விழா நடைபெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாக கருதுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகைத் தரப்பில் கூறும்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு 16ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு ஜூன் 19 ந் தேதியும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஜூன் 28ஆம் தேதியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு ஜூலை 7ஆம் தேதியும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கரோனா காரணமாக வழங்கப்படாத பட்டமளிப்பு விழா உட்பட 3 ஆண்டு மாணவர்களுக்கும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும் நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.