இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாட்டில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவிவருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் மழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் மற்றும் ஏற்காட்டிலும் தலா இரண்டு செ.மீ., கூடலூர் மற்றும் வால்பாறையில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 37 மற்றும் 29 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். மேலும், இன்று அநேகமாக லேசான மழைக்கும் வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.