இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கு மத்திய வங்கக் கடல், அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில், விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.