தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கலந்துகொண்டு ஆலந்தூர், பல்லாவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கொடுத்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேசுகையில், "திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதியை இணைக்கும் அடையாறு ஆற்றுப் பாலத்தின் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், அருகில் உள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோமங்கலம் தர்கா சாலை பாலத்தின் வழியாகப் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் அளவு குறைந்தவுடன் பாதை சரிசெய்யப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் பாலப்பணிகள் நிறைவுபெறும். மேலும் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!