சென்னை: வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீரானது தேகத்துடன் காணப்படுகிறது. அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் பல்வேறு இடங்களில் மழை வெள்ளமானது வெளியில் செல்ல வழியில்லாமல் அங்கேயே தேங்கியுள்ளது. இதில் வேளச்சேரி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ராம் நகர், விஜயநகர் போன்ற இடங்களில் மழை வெள்ளமானது தெருக்களில் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் நடந்து செல்பவர்களும் அவதிப்படுகின்றனர். பல இடங்களில் மழை வெள்ளத்தில் கழிவுநீரும் கலந்துள்ளது.
இப்பகுதியில் மழை வெள்ளத்தை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து விஜயா என்பவர் கூறியதாவது, "சென்ற வாரம் பெய்த கனமழையால் வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. கிட்டத்தட்ட மூன்று நாள்கள் வீட்டுக்குள் தண்ணீர் கிடந்தது.
அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு தண்ணீரிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி அலுவலர்கள் வரவில்லை. கிட்டத்தட்ட 4,5 ஆண்டுகளாக இங்கே இதே நிலைதான் நீடிக்கிறது. விரைவில் இதற்கான தீர்வை அரசு கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடல்நீரை குடிநீராக்க புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி சாதனை