சென்னை: தமிழ்நாட்டில் வரும் அக். 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் காலாண்டுத்தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவும், எண்ணும் எழுத்தும் பயிற்சிக்குச்செல்லும் 5ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் 8ஆம் தேதி வரை பள்ளிக்கு வரத்தேவையில்லை என தொடக்கக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொடக்ககல்வித்துறை இயக்குநர், அறிவொளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ' தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் காலாண்டுத்தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கு ஒன்றிய அளவில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 3 நாட்கள் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
எனவே, தொடக்கக்கல்வி இயக்க நிர்வாகத்தின்கீழ் செயல்படும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் முதல் 5ஆம் வகுப்புகள் வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் ( தலைமை ஆசிரியர் உட்பட) ஒன்றிய அளவில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
முதல் பருவத்தேர்வு விடுமுறைக்குப் பின் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புகள் வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்து கொள்வதால் இந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் அந்த நாட்களில் பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை.
நடுநிலைப்பள்ளிகளில் 6ஆம் முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளி செயல்படும்’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை