சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தேனி, தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 21, 22 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அயனாவரத்தில் 13 செ.மீ., பெரம்பூரில் 15 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ., நீலகிரியில் 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 9 செ.மீ., மழையில் 8 செ.மீ., கிடைக்கப் பெற்றுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிகழும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக லட்சத்தீவு, மாலத்தீவு, கேரள கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம்' என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: வந்தது வடகிழக்குப் பருவமழை - ஆரம்பித்தது பாதுகாப்பு நடவடிக்கை!