சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் புதுப்பேட்டையில் மீன்பாடி வண்டி ஓட்டும் கூலி வேலை செய்துவந்தார். சந்தோஷின் மனைவி இறந்த நிலையில் அவரது ஒரு மகன் மட்டும் அத்தை வீட்டில் தங்கி வசித்துவருகிறார்.
மதுபோதையில் கொலை
இவர் நேற்று இரவு (டிச. 17) வேலை முடித்துவிட்டு அங்குள்ள தனது மீன்பாடி வண்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், சந்தோஷின் நண்பர்களான இளவரசன், அருண்குமார் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
அப்போது, மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். திடீரென அருண், இளவரசன் ஆகியோர் சந்தோஷ் குமாரை தனது மனைவியுடன் நீ எப்படி பேசுவாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
வழக்குப்பதிவு
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் காவல் துறையினர் சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள இளவரசன், அருண்குமார் ஆகிய இருவரையும் வலைவீசித் தேடிவந்தனர்.
இந்நிலையில், இளவரசன், அருண்குமார் மற்றும் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
சிசிடிவி வெளியீடு
இந்நிலையில், சந்தோஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவியில் சந்தோஷ்குமாரின் கழுத்தை இளவரசன், அருண்குமார் ஆகியோர் கத்தியால் அறுக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
இதையும் படிங்க: ஓவர் டார்ச்சர்! செல்போன் செயலியில் கடன் பெற்ற இளம்பெண் உயிரிழப்பு