சென்னை: தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலையில் 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த விலை உயர்வு போதவில்லை என்றும், தங்கள் கோரிக்கைப்படி 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரி கடந்த வாரம் பால் நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த வாரம் சென்னையில் சில இடங்களில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று(மார்ச்.16) பால் வளத்துறை அமைச்சர் நாசர், பால் முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தமிழ்நாடு முழுவதும் இன்று பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்திப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், பால் உற்பத்தியாளர்களை தூண்டிவிட்டு அதிமுக பிரச்னையை ஏற்படுத்த பார்க்கிறது என்றும் பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினிற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களான விவசாயப் பெருமக்கள் தங்களின் கால்நடை பராமரிப்பு, கலப்பு, உலர், பசுந்தீவனங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் ஆகிய செலவினங்கள் ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
இதனால் பால் உற்பத்திக்கான செலவினங்களை ஈடுசெய்ய முடியாததால், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை முன் வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காததால், அவர்களில் சிலர் அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவினை புறக்கணித்து தனியார் பால் நிறுவனங்களை நாடுகின்ற சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர், ஒரு சில சங்கங்கள் மட்டுமே பால் நிறுத்தப் போராட்டம் நடத்துவதால், தமிழகத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. பிரச்னைகளின் சாரம்சத்தை, உண்மையான களநிலவரத்தை அரசுக்கு எடுத்துக் கூறி அதற்கு தீர்வு காண முயலாமல் அமைச்சரே தவறான தகவல்களை வெளியிடுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.
ஆனால், உண்மையான களநிலவரப்படி கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக ஆவின் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அதுதொடர்பாக ஆதாரப்பூர்வமாக ஊடகங்களில் செய்திகள் வெளியான போதும், அதை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மறுத்து, அப்படி ஏதும் நடைபெறவே இல்லை என அடித்துக் கூறினார். ஆனால் பாதிக்கப்பட்டது என்னவோ பால் முகவர்களும், பொதுமக்களும்தான் அமைச்சர் அல்ல.
எனவே, நியாயமான கோரிக்கைகள் நிறைவேற கடைசி ஆயுதமான ஆவினுக்கு பால் வழங்காமல் பால் நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும், பால் கொள்முதல் விலை உயர்வை சமாளிக்க ஆவினில் அனைத்து வகை பால் விற்பனை விலையை ஒரே சீரான அளவில் உயர்த்திடுமாறும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இந்த பிரச்னை இனி வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க அரசு ஊழியர்களுக்கும், ஆவின் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்குவதுபோல், ஆண்டுதோறும் ஆவினுக்கான பால் கொள்முதல், விற்பனை விலை மற்றும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை என மூன்றையும் கணிசமான அளவு தானாக உயர்கின்ற வகையில் அரசாணை வெளியிட்டு பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் வயிற்றில் பால் வார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் பாலை தரையில் ஊற்றி போராட்டம்!