உலக செவிலியர் தினம் இன்று (மே 12) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரி அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை கொண்டாடினர். செவிலியர் அனைவரும் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
பின்னர், விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை, `செவிலியர், முன்களப்பணியாளர்கள் ஆகியோர் மற்றவர்களது நலனை கருத்தில் கொள்வதுடன், தங்களது நலன்களிலும் அக்கறையை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக விழாவில் கலந்துகொண்ட செவிலியர், முன் களப்பணியாளர்கள் சேவையை பாராட்டி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பிறகு தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நூறு செறிவூட்டப்பட்ட ஆக்ஸிசன் சிலிண்டர்களை புதுச்சேரி சுகாதாரத்துறை நலத்துறை செயலர் அருணிடம் ஒப்படைத்தார்.