பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் வீடியோ விவகாரம் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக தலைமை நேற்று அறிவித்தது.
அவருடன் சேர்த்து வெண்பா கீதாயன் என்ற பெண்ணையும் தமிழ்நாடு பாஜக தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. ஆனால், வெண்பா கீதாயன் பாஜகவின் உறுப்பினரே இல்லை என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் ஓடுகிறது.
இதனிடையே மதனின் யூ ட்யூப் சேனலும் முடக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக அவரது சேனல் மீது எந்த புகாரும் வராத சூழலில், எப்படி சேனல் முடக்கப்பட்டது என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் மதன் ரவிச்சந்திரன் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் ராகவன் விவகாரம் குறித்தும், கட்சியினர் குறித்தும் அவரும், அண்ணாமலையும் பேசிய விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்த ஆடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோவில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகித்திருந்தார்.
ஆனால், இந்த ஆடியோவில் ராகவன் குறித்த வீடியோவை பொதுவெளியில் பகிருமாறு கூறும் அண்ணாமலை, எதற்காக அந்த அறிக்கையில் உள்நோக்கம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
இன்று வெளியான ஆடியோவை கேட்கும் போது அண்ணாமலைக்குத்தான் இந்த விஷயத்தில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.
மேலும், வீடியோவை வெளியிடுமாறு தைரியம் கொடுத்துவிட்டு வீடியோ வெளியிட்டவர்களை கட்சியிலிருந்து நீக்குவது தலைமை பண்பு அல்ல எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க :அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்