சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஒன்றியம், அகரம் தென்ஊராட்சி மன்றத் தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர் ஆதிகேசவன் என்பவர், வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் என்பவர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கை வைத்தார்.
மறுவாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் 77 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதிகேசவன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களை வெளியேற்றினர்.
சாலை மறியல்

அதைத்தொடர்ந்து இன்று (அக்.14) ஆதிகேசவன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் ஏமாற்றி வெற்றி பெற்றதாகக்கூறி, சிட்லப்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் உறுதி
அப்போது அவ்வழியாக வந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவின் காரை மறித்து புகாரைத் தெரிவித்து, அகரம்தென் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனக்கூறினர்.
சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம்கூறி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததையடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி!