தமிழ்நாட்டில் இந்தாண்டு முதல் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் முறையாக பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தொடக்கக் கல்வித் துறை வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருந்ததாவது:
2019- 20ஆம் கல்வியாண்டு முதல் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்துவகை பள்ளிகளிலும் படிக்கும் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்திட வேண்டும்.
இந்தக் கல்வி ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள பொதுத்தேர்விற்கு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கிட தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
இந்தத் தேர்வானது முதல், இரண்டாம், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். எனவே மூன்று பருவ பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை அவ்வப்போது சிறு தேர்வுகள் மூலம் மீண்டும் நடத்திட வேண்டும்.
இரண்டாம் பருவத்திற்கான தேர்வுகள் நவம்பர் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வானது மாவட்டத்திற்கு ஏற்ப தேதிகள் மாறுபடலாம். எனவே அனைத்து மாணவர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத்தேர்வு' - செங்கோட்டையன்!