சென்னை நகரில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றதும் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தன்னிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனையடுத்து சென்னை நகரம் முழுவதும் பொதுமக்கள் வசதிகேற்ப 12 சைபர்கிரைம் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் ஆன்லைன் மூலம் திருடப்படும் பணத்தை காவல் துறையினர் சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பெற்றுத் தருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து ரோந்துக் காவல் வாகனங்களின் சேவைகளை மக்கள் பயன்படுத்தவும், புகார் கொடுக்க காவல் நிலையம் செல்ல முடியாத பொதுமக்களுக்கு புகாரைப் பெற்று உதவிட ரோந்து காவல் துறையினர் புகார்களை வாங்கும் புதிய திட்டத்தை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று (நவ. 4) தொடங்கி வைத்தார்.
சென்னை நகரிலுள்ள 124 காவல் நிலையத்தில் உள்ள ரோந்து வாகனங்கள் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட அறிவிக்கப்பட்ட இடங்களில் உரிய நேரப்படி நிறுத்தப்படும் எனத் தெரிவித்தனர். அதனடிப்படையில் இன்று (நவ. 4) வேப்பேரி காவல்துறையின் ரோந்துவாகனம் டவுட்டன் சந்திப்பு, ஈவிகே சம்பத் சாலையிலும், பெரியமேடு காவல் துறையினர் ரோந்து வாகனம் சூளை ரவுண்டானா எல்.சி. பாய்ண்ட், கீழ்பாக்கம் ரோந்து வாகனம் வெள்ளாள தெரு- மில்லர்ஸ் சாலை என அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களிலும் ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டன. காவல்நிலையம் வர இயலாத பல புகார்தாரர்கள் காவல் ரோந்து வாகனங்களில் தங்களது புகார் மனுக்களை கொடுத்து வருகின்றனர்.
அதற்கு உடனடியாக மனு ஏற்பு சான்றிதழை காவல் துறையினர் வழங்கி வருகின்றனர். பெறப்பட்ட புகார்களில் உடனடியாக தீர்க்கக் கூடிய வழக்குகளை ரோந்து காவல்துறையினரே முடித்து வருகின்றனர். உடனடி தீர்வு காணமுடியாத புகார்களை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் சேர்க்கப்பட்டு புகார் அளித்தவரின் செல்போனுக்கு மனு ரசீது எண் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு உரிய அலுவலர்களால் நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமும் ரோந்து வாகனத்தின் இடத்தை மாற்றி அதன் இடங்களை சமூக வலைதளம் மூலமாக பதிவிட்டு வருவதாகவும், இந்த திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கீழ்ப்பாக்கம் உதவி ஆய்வாளர் மோகன் தெரிவித்தார்.
இது குறித்து பூக்கடை நடத்தி வரும் தாமரை செல்வி கூறுகையில், “இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு பலர் அராஜகம் செய்கின்றனர். இது குறித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது ரோந்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கும் வசதியை காவல்துறையினர் ஏற்படுத்தி உள்ளதால் புகார் அளிக்க ஏதுவாக உள்ளது” என்றார்.
இன்று ஒரே நாளில் ரோந்து வாகனங்களில் உள்ள காவல் துறையினரிடம் 72 புகார் மனுக்களை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை - அரசு அதிரடி அறிவிப்பு!