ஆன்லைனில் கேம் விளையாடி பெண்கள், குழந்தைகளிடம் ஆபாசமாக பேசி தனது யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்த மதனை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தர்மபுரியில் வைத்து இன்று (ஜூன்.18) கைது செய்தனர். இதனையடுத்து மதனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, மனைவி, குழந்தையை விடக்கூறி கெஞ்சியாதக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினரின் காலில் விழுந்து அவர் கண்ணீர்விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
மதன் பயன்படுத்திய லேப்டாப்பை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது அதில், இணையத்தில் பதிவேற்ற தயார் நிலையில் இருந்த பல வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இந்த வீடியோக்களில் ஆபாசமாக பேசுவதற்கு பெண் ஒருவருக்கு பணம் கொடுத்து தயார் செய்ததும் தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து மதனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஆதரவற்றோருக்கு உதவி செய்வதாக தன்னுக்கு ஆதரவாக பேசி வெளியான வீடியோக்கள் அனைத்தும் பொய். தன்னை புகழ்ந்து பேசக்கூடிய நபர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 5 லட்சம் வரை தந்தாகவும் மதன் தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவை தனது சேனலில் ஒளிப்பரப்பி பார்வையாளர்களிடம் இருந்து அதிக பணம் வசூலித்ததாகவும், ராணி என்ற பெண்மணிக்கு மட்டுமே 5லட்சம் ரூபாய் வரை வழங்கியதாகவும் மதன் தெரிவித்தார்.
மேலும் ஆபாச வீடியோ மூலம் சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார்கள்,2 சொகுசு பங்களாக்கள் வாங்கியதாகவும், 4 கோடி ரூபாய் வரை வங்கி கணக்கில் வைத்துள்ளதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து பப்ஜி மதன்- கிருத்திகா வங்கி கணக்கை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். மதனின் சொகுசு கார்கள் இரண்டையும் பறிமுதல் செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தர்மபுரியில் கைது செய்யப்பட்ட மதனை காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மதனின் மனைவி கிருத்திகாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூ-ட்யூபர் மதனின் முன்பிணை வழக்குத் தள்ளுபடி