சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நினைவிடம் அமைக்க சுமார் 50.80 ரூபாய் கோடியை தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
சமீபத்தில் நினைவிடத்தின் பணிகள் நிறைவடைந்தை அடுத்து, அதனை கடந்த மாதம் 27ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம், டிஜிட்டல் அருங்காட்சியகம், தடாகம், மியாவாக்கி தோட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு 12 கோடி ரூபாயும், நினைவிடத்தின் 5 ஆண்டு பராமரிப்பு பணிக்கு 9 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனுடைய இறுதிக்கட்ட பணி நடைபெறுவதால் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்து பதாகை வைத்துள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்து பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலா வரும் 7ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் செல்வதை தடுக்கும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்!