சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு பிறகு திமுக அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து தலைமை வழக்கறிஞராக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட விஜய் நாராயண் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்க ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்தது.
இதனையடுத்து, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரத்தை நியமிக்க கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து, 2021ஆம் ஆண்டு முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் சட்ட ஆலோசகராகவும், நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வழக்குகளை கையாண்டு வந்த சண்முகசுந்தரம், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், தொடர்ந்து வழக்கறிஞராக பணியாற்றுவேன் என்றும் அறிவித்துள்ளார்.
இவ்வாறு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்ததையடுத்து, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை தலைமை வழக்கறிஞராக நியமிக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அரசின் பரிந்துரையை ஏற்று, தலைமை வழக்கறிஞர் நியமனத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இன்று (ஜன.11) பி.எஸ் ராமன் பதவியேற்க உள்ளார்.
யார் இந்த பி.எஸ்.ராமன்? கடந்த 1960ஆம் ஆண்டு பிறந்த பி.எஸ்.ராமன், வித்தியா்மந்திர் பள்ளியில் தனது ஆரம்பகால பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் பாடப்பிரிவில் பட்டப் படிப்பை முடித்தார். கடந்த 1984ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்.
முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும், அவரது தந்தையுமான ஏ.பி.ராமன் மறைவுக்குப் பிறகு, தனியாக தொழில் புரிய தொடங்கினார். கடந்த திமுக ஆட்சியில் 2009 முதல் 2011 வரை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கம்பம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் - சிறப்புச் சார்பு ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை!