சென்னை: பொறியியல் படிப்பில் இறுதிச்சுற்றுக் கலந்தாய்வில் தற்காலிக ஒதுக்கீட்டில் 43,913 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் தங்களுக்கான இடங்களை நாளை 5 மணிக்குள் உறுதி செய்யவேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது. கலந்தாய்வின் முடிவில் சுமார் 43 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக.11ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பொறியியல் படிப்பிற்கான இறுதிச் சுற்றுக் கலந்தாய்வு அக்.29 தொடங்கி நவ.13 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்விற்கான இறுதி ஒதுக்கீடு நவ.3 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. தரவரிசைப் பட்டியில் 94 ஆயிரத்து 621 முதல் 1 லட்சத்து 56 ஆயிரத்து 278 வரையில் இடம் பெற்ற 61 ஆயிரத்து 658 பேர் அழைக்கப்பட்டனர்.
அவர்களில் விரும்பும் கல்லூரிகளைப் பொதுப்பிரிவில் 39,350 பேரும், அரசுப்பள்ளி மாணவர்கள் 4,563 பேரும் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளை 2 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பில் 3 சுற்று கலந்தாய்விற்கு 94 ஆயிரத்து 620 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 52,467 இடங்கள் நிரம்பி உள்ளது. 1 லட்சத்து 39 ஆயிரத்து 251 இடங்களில் 86,784 இடங்கள் 4 வது சுற்றில் காலியாக இருந்தது. தற்காலிக ஒதுக்கீடு 43,913 மாணவர்களுக்குச் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வில் 42 ஆயிரத்து 871 இடங்கள் காலியாக இருக்கும் நிலைமை ஏற்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்த உத்தரவு ரத்து