நம்மவர் நக்கல்
"லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி" என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கமல் ட்வீட்டின் பின்னணி
கடந்த (டிச.14, 15ஆம்) தேதி சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் பனகல் மாளிகையில் உள்ள அவரது அலுவலகத்தில், சாலி கிராமத்தில் உள்ள வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
1996ஆம் ஆண்டு கடலோர மண்டல மேலாண்மை வரைபடத்தை மாற்றி, எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளக்கூடாது என்று கூறப்பட்ட எண்ணூரில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை, தொழிற்சாலை, துறைமுகங்கள், தனியார் கட்டுமானங்கள் பலவற்றிற்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடத்துள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தினால் சுற்றுச்சூழல் துறையில் பல முக்கிய உயர் அலுவலர்கள் சிக்குவார்கள்.
பணக்கட்டு, தங்கம், வெள்ளி, வைரம்...
இந்தச் சோதனையில் சாலி கிராமத்தில் உள்ள பாண்டியனின் வீட்டில் கணக்கில் வராமல் வைத்திருந்த ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் பணம், 1.22 கோடி மதிப்பிலான தங்க நகைகள், 1.51 கோடி வெள்ளி நகைகள், 1.51 லட்ச ரூபாய் வைர நகைகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகச் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஏழு கோடி ரூபாய் மதிப்புடைய 18 சொத்து ஆவணங்களையும், 37 லட்ச ரூபாய் சேமித்து வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு ஆவணங்களையும், ஒரு கார், மூன்று இருசக்கர வாகனத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
இதையும் படிங்க: எண்ணூர் முறைகேடு: சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!