சென்னை: ராமாபுரத்தில் உள்ள கலசத்தம்மன் கோயிலுக்காகப் பொதுப்பாதையை ஆக்கிரமித்து மண்டபம் கட்டியுள்ளதாகக் கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, சென்னை மாநகராட்சி அலுவலர்கள், அப்பகுதி வட்டாட்சியர், கோயில் நிர்வாகத்தினர், மனுதாரரான அறப்போர் இயக்கம் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வுசெய்தது தொடர்பாக மதுரவாயல் வட்டாட்சியர் சார்பில் அக்டோபார் 26ஆம் தேதியிட்ட அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், அறிக்கையில் மனுதாரரான அறப்போர் இயக்கத்தின் பிரதிநிதிகள் இடம்பெற்றது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், அறப்போர் இயக்கம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், கடந்த மார்ச் மாதம் நடத்திய ஆய்வில் தாங்கள் கலந்துகொண்டதாகவும், வட்டாட்சியர் அந்த அறிக்கையை மறைத்துவிட்டு, தங்களை அழைக்காமல் ஒரு ஆய்வை நடத்தி அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவிட்டும் அதனை மீறி மனுதாரர் இல்லாமல் ஆய்வு நடத்திய அறிக்கையைத் தாக்கல்செய்ததற்காக மதுரவாயல் வட்டாட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் தொடங்கிய விமான சேவைகள்