சென்னை: எம்.ஆர்.சி.நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில், 126 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, கரோனாவால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 71 நபர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "சில இடங்களில் சொத்து வரி கட்டாமல் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான வரியை வசூலிக்கவும் முறையற்ற நிர்வாகத்தை முறைப்படுத்தவுமே சொத்து வரி உயர்வு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துவது சரியாக இருக்காது என்பதற்காகவே, ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்கள் தீட்டவும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதித் தேவையை தாங்களே உருவாக்கிக்கொள்வதற்காகவுமே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை ஏற்படுத்துவதற்கோ, யாரையும் சங்கடப்படுத்துவதற்கோ சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவாக உள்ளது.
அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், அதை சிறப்பாக நடத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா உணவகப் பணியாளர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை. அம்மா உணவகங்களில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினால், அது நிவர்த்தி செய்யப்படும்” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
நிகழ்வில் அலுவலர்கள் ஷிவ்தாஸ் மீனா, பொன்னையா, மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : ரூ.224 கோடி செலவில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடக்கம்