சென்னை: இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், ’திமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு அரசில் அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றி 100 ஆண்டுகள் நிறைவு செய்த பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.
’இனமான பேராசிரியர்’ என்று என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் பெருமிதத்தோடும், அண்ணாவால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும் அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன்.
இனமான பேராசிரியர் ஏன்? தமிழர், தமிழர் வாழ்வு, தமிழரின் நலன், தமிழ் இனத்தின் வாழ்வு எனத் தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் ஓயாது தன் குரலை ஓங்கி ஒலித்தவர், அன்பழகன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இணைந்து தமிழர் நலனில் முன்னணி வகித்துப் பாடுபட்டதால் தான் அவர் இனமான பேராசிரியரானார்.
பேராசிரியர் அன்பழகன் அவர்கள் 1922 டிசம்பர் மாதம் 19ஆம் நாளில் திருவாரூருக்கு அருகிலுள்ள காட்டூரில் பிறந்தார். அவருடைய தந்தை கல்யாணசுந்தரம், தாய் சொர்ணாம்பாள். இவருக்கு முதலில் ராமையா என்னும் பெயர் சூட்டப்பட்டது. தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றால் ராமையா என்ற தனது இயற்பெயரை, அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.
அன்பழகனின் தந்தை காங்கிரஸ் இயக்கத்தின் மீது அபிமானம் கொண்டவர். 1925இல் பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறியபோது, அவருடன் சேர்ந்து வெளியேறியவர். சிறுவயதில் தந்தையாருடன் சேர்ந்து பெரியாரின் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அவருடைய பேச்சுகளைக் கேட்பது அன்பழகனின் வழக்கம் இருந்தது. ஆகவே, சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அரசியல் மீது அவருக்கு ஓர் ஈடுபாடு தோன்றியது.
படித்த காலத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும், அண்ணாவின் தமிழ் உணர்வுமிக்க பேச்சாற்றலாலும் ஈர்க்கப்பட்டார். அதனாலே பொதுவாழ்க்கை மீது அவருக்குப் பிடிப்பு உண்டானது. 1942ஆம் ஆண்டில் திருவாரூர் விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில் அண்ணா கலந்துகொண்டார்.
அவரைப் பார்க்க வந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயினர். அதைத் தொடர்ந்து அன்பழகனை ஒரு கூட்டத்தில் பேச அழைத்தார், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அப்போது உருவான நட்பு 76 ஆண்டுகள் நீடித்தது. எத்தகைய சூழலிலும் கருணாநிதியை விட்டோ திமுகவை விட்டோ விலகாமல் இருந்தவர் தான், அன்பழகன்.
’நாங்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்’ என்று மகிழ்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டு மகிழ்ந்தவர் கருணாநிதி. பேராசிரியர் அன்பழகன் தனது 26ஆம் வயதில், 1948ஆம் ஆண்டு தைப் பொங்கல் நாளில் `புதுவாழ்வு’ என்னும் மாத இதழை வெளியிட்டார். இதன் வாயிலாகத் தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார்.
`புது வாழ்வு’ பத்து மாதங்கள் மட்டுமே வெளிவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், டாக்டர் மு.வரதராசன், இரா.நெடுஞ்செழியன் முதலியோர் இந்த இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மாணவர்களின் பங்கு மகத்தானது என்பதை நன்குணர்ந்தவர் அவர். மாணவப் பருவம் முதலே அரசியல், மொழிப்பற்று, இனப்பற்று ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களித்தவர் அன்பழகன்.
நீதிக்கட்சி தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட வரலாறு கொண்டது திராவிட இயக்கம். பல்வேறு காலகட்டங்களில் தலைவர்கள் பலர் தங்களது பங்களிப்பினைத் தமிழ் நாட்டுக்கும், தமிழ் இன மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் தந்துள்ளனர்.
அன்பழகன் காலத்தில், மாணவர் சமுதாயம் அரசியல் மாற்றத்துக்கு முக்கியப் பங்காற்றியது. பள்ளிப் பருவத்திலேயே தமிழ்மொழியின் மீது தணியாத தாகம் கொண்டிருந்ததால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.
அண்ணாவின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க 1944ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டு வரையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய காரணத்தால் அவருடைய பெயரில் முன்னொட்டாக 'பேராசிரியர்' என்னும் சொல் ஒட்டிக்கொண்டது.
அன்பழகன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்; 1962ஆம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1967ஆம் ஆண்டு தொடங்கி 1971ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதலமைச்சரானார். அந்தக் காலகட்டத்தில் 1971இல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அன்பழகன், சுகாதாரத் துறை என்றிருந்த பெயரை, மக்கள் நல்வாழ்வுத் துறை என மாற்றினார்.
அன்பழகன் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இரண்டு முறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்; ஒரு முறை நிதியமைச்சராகவும் தனது செயல்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 1977ஆம் ஆண்டு முதல் திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார்.
சமூக சீர்திருத்தம், இனமொழி, வகுப்புரிமை, தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரைப் பற்றிய நூல்களை அன்பழகன் எழுதியுள்ளார். பிராமணன் பிறக்கவில்லை, இன முழக்கம், மாமனிதர் அண்ணா, The Dravidian Movement, வகுப்புரிமைப் போராட்டம், தமிழர் திருமணமும் இனமானமும், ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’, ‘வாழ்க திராவிடம்’, திராவிட இயக்கத்தின் தோற்றமும் தேவையும் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.
அரசியலில், ஆட்சிப் பணியில், அளப்பரிய பல சாதனைகளை, சரித்திரங்களை நிகழ்த்தி இருந்தாலும், எழுத்துப் பணிக்கு என்றுமே அவர் ஓய்வு தந்ததில்லை. அன்பழகனின் மேடைப் பேச்சு ஆற்று நீரோட்டம் போன்று தெளிவானதாகவும், குளுமையும் இருக்கும் துள்ளலாகவும் இருக்கும்.
பல்கலைக்கழகத்தில் பயின்ற நாள்களிலும், துணைப் பேராசிரியாகப் பணியாற்றிய காலத்திலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த ஈடுபாடுதான் அவரைப் பொது வாழ்க்கை நோக்கித் திருப்பியது. அண்ணா பங்கேற்ற விழாவில், அன்பழகன் பேசிய உரையே அவர் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.
அமைச்சராக பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், பரந்த தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தியுள்ளார். அன்று ‘முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கருணாநிதியின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும் எனப் பேராசிரியர் அன்பழகன் குறிப்பிடுவது வழக்கம்.
பேராசிரியரின் நூற்றாண்டை முன்னிட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியரின் சிலையைத் திறந்து வைத்தார்.
ஏறத்தாழ 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம், மாநில, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தணிக்கை அலுவலகங்கள் மற்றும் அரசு சிறுசேமிப்புத் துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கிவரும் இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டினார்.
நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள அவருடைய நூல்களுக்கான காப்புரிமைத் தொகையை அவரது குடும்பத்தாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த நிலையில் நூற்றாண்டு விழா நிறைவு நாளில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவுவதற்கும், பேராசிரியர் அன்பழகன் கல்வி வாளகம் என்ற வளைவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கல்வித்துறையின் சாதனைகள்: பேராசிரியர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்ட காலங்களில் தமிழ்நாடு அரசு கல்விக்காகச் செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை.
- 1990-91ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் சேரும் கிராமப்புற மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
- 1996 – 2000 காலகட்டத்தில் 965 தொடக்கப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்தன.
- பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவரது உயர் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொண்டது.
- 666 பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பில் கணினிப் பாடம் தொடங்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு அடைந்திருக்கும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்கு அப்போதுதான் அடித்தளமிடப்பட்டது.
- 1996-2000 வரையான காலகட்டத்தில் 6 முதல் 14 வயதுள்ள 27,000 குழந்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.
- ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டன. இதனால் ஏழை எளிய மாணவரது அடிப்படைக் கல்வி வளர்ச்சிச் சொல்லிக்கொள்ளும்படி இருந்தது.
- 100 கிராமப்புற மாணவருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.
- 1997ஆம் ஆண்டில் தான் உயர்கல்வித் துறை தனியாக உருவாக்கப்பட்டது. 1997-98இல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் பெயரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.
- 17.09.1997அன்று பெரியார் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.
- பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களில் இருந்து தொழில்கல்வியில் சேர்ந்த முதல் 10 நிலை மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசு ஏற்றுக்கொண்டது.
உயர்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்குவது குறித்து ஆராய டாக்டர் கலைஞர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் செயல்தலைவராக தமிழண்ணல் நியமிக்கப்பட்டார். இவையெல்லாம் பேராசிரியர் அன்பழகன் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில மட்டுமே’ என்று அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி- நரிக்குறவர் மாணவர்கள் சாதனை