தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையினரிடம் கடந்த ஜூலை 3ஆம் தேதி ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் சினிமா ஃப்யூச்சர் என்ற வாட்ஸ்அப் குரூப்பில், “திருமலை என்பவரிடம் தான் 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும் அதை ஒரு வருடத்தில் திருப்பி கொடுப்பதாக கையெழுத்திட்டதாக போலி ஆவணங்கள் பகிரப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அந்த வாட்ஸ்அப் குரூப்பில் 'லிங்கா' படப் பிரச்னையில் தொடர்புடைய தயாரிப்பாளர் சிங்காரவேலன், கார்த்தி என்பவர்களும் அட்மின்களாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரவுள்ள நிலையில் தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அட்மின்களாக இருக்கின்ற தயாரிப்பாளர் சிங்காரவேலன், கார்த்தி, ஆவணத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிய ராஜ்குமார் ஆகிய மூவர் பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விளக்கம் அளிக்க கலைப்புலி தாணு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூகவலைதளத்தில் தயாரிப்பாளர் சங்கத்திலும் குரூப்பிசம், நெப்போட்டிசம் எப்போதும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று செயல்படுவது தயாரிப்பாளர் தாணு என சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பரவின.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த கலைப்புலி எஸ் தாணு, சுரேஷ் காமாட்சி தெரிவித்தது போன்று தயாரிப்பாளர் சங்கத்தில் இல்லை எனவும் அதுபோன்று இருப்பதாக கூறும் சுரேஷ் காமாட்சியிடமே விளக்கம் கேட்டு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் பாரதிராஜாவிற்கும் தனக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை, அவர் தனக்கு கடவுள் போன்றவர் என்றும் அவரது படைக்கு நான் முதல் தளபதி எனவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க... 'கோலிவுட்டிலும் குரூப்பிஸம்; ஒரு தயாரிப்பாளர் பலரது வாழ்வைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்'