சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை(ஆக.20) முதல் தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் இடங்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை முதல் ஆன்லைன் மூலம் தொடங்குகிறது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு கடந்த 16ஆம் தேதி தகுதிபெற்ற 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணாக்கர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாணவர்கள் தரவரிசைப்பட்டியல் மீது திருத்தம் செய்யவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பி.இ, பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 20,21இல் முதற்கட்டமாக, சிறப்புப்பிரிவு இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தகுதிபெற்ற மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரரின் வாரிசுகளுக்கு ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து சிறப்பு ஒதுக்கீட்டுப்பிரிவில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு, தொழிற்கல்விப்பிரிவு ஆகியவற்றில் விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி அக்டோபர் 23ஆம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்தாண்டு முதன்முறையாக கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும். மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் பொதுசெலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும்.
கலந்தாய்வு செயல்முறைகள்?: கலந்தாய்வு நான்கு சுற்றுகளில் நடைபெறும். முதலில் சேர விரும்பும் கல்லூரிகளை வரிசைப்படி விருப்பப்பட்டியல் நிரப்புதல் (Choice Filling), பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்தல் (Allotment), ஒதுக்கீட்டை உறுதி செய்தல் (Confirmation), சேர்க்கையை உறுதி செய்தல் (Admission),
கல்லூரியிலோ அல்லது மாணவர்கள் வசதி மையங்களிலோ கல்லூரி கட்டணத்தை செலுத்தி சேர்க்கையை உறுதிச் செய்தல்(Admission), விருப்பப் பட்டியல் நிரப்புதல் (Choice Filling), விண்ணப்பதாரர்கள், தரவரிசைப் பட்டியலில் பிடித்த இடங்கள் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர். முதலில், விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டியல் நிரப்ப வேண்டும். தங்கள் விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை வரிசைப்படி ( preferences) நிரப்பவேண்டும்.
எத்தனைக் கல்லூரிகளையும் நீங்கள் சமர்ப்பிக்கலாம். ஆனால், விருப்பங்களை வரிசைப்படியாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த விருப்பப்பட்டியலை நிரப்புவதற்கு மட்டும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்தல், தரவரிசையின்படி சமர்ப்பித்த விருப்பப்பட்டியல் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இரண்டு நாட்களுக்குள் இந்த ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி இடங்களை உறுதி செய்யலாம்.
1. Accept and Join : ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவு திருப்திகரமாக இருந்தால், ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதி செய்து அக்கல்லூரியில் சேர்ந்து கொள்ளுங்கள்.
2. Accept and Upward: ஒதுக்கப்பட்ட இடம் திருப்திகரமாக இருந்தாலும், நீங்கள் தேர்வு செய்த வேறு இருக்கும் இடங்களுக்கும் காத்திருக்கலாம். உதாரணமாக, ஒரு மாணவருக்கு அவர் தேர்வு செய்த 5ஆவது இடம் ஒதுக்கப்பட்டிருந்தால், அவர் 1, 2,3,4 ஆகிய இடங்களுக்கு காத்திருக்கலாம். ஒருவேளை மேல் நோக்கிய நகர்வில் மேற்கண்ட விருப்ப வரிசை இடங்கள் கிடைக்காதபட்சத்தில், அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 5ஆவது இடத்திற்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு வழங்கப்படும். ஒரு வேளை அந்த மாணவர்களுக்கு 5ஆவது இடத்தை விட சிறந்த தேர்வு கிடைக்கும்பட்சத்தில், கிடைத்த விருப்ப கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.
3.Decline and Upward: ஒதுக்கப்பட்ட கல்லூரியை நிராகரித்து, மேல்நோக்கிய நகர்விற்கு காத்திருக்கலாம். மேல் நோக்கிய நகர்தலில் விருப்பமான இடத்தைப் பெற இயலாவிட்டால் அடுத்த கலந்தாய்வு சுற்றில் கலந்துகொள்ள வேண்டும்.
4. Decline and Move to Next Round: மாணவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட இடம் திருப்திகரமாக இல்லையெனில், மேல் நோக்கிய நகர்தலுக்கு காத்திருக்காமல், அடுத்த சுற்றில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.
5. Decline and Quit: மாணவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திருப்தி அடையாமல் இருந்தால், அதனைத்தொடர்ந்து வரும் சுற்றுகளிலும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காமல் கலந்தாய்விலிருந்து வெளியேறலாம். மேலும் கலந்தாய்வில் ஏற்படும் சந்தேகங்களை மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையத்திற்கு சென்று கேட்டு தெரிந்துக்காெண்டும் விண்ணப்பிக்கலாம்.