தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் ஏராளமான ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு சிறு தொழில் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக பேக்கரி பொருட்கள், அழகுசாதன பொருட்கள், எண்ணெய் தயாரித்தல் உட்பட பல்வேறு தொழில்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு தொழில் தெரிந்தவர்கள் மேம்படும் வகையில், கைதிகளே சிறையில் பொருட்கள் தயாரிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக சிறை வளாகத்திலேயே அங்காடியும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்று சிறைத்துறை சார்பாக அங்காடி வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சிறைக்கைதிகள் செய்த பொருட்களை விற்பனைக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்துள்ளனர். இதில் கைதிகள் தயாரித்த உணவுபொருட்கள், போர்வைகள், சட்டைகள், எண்ணெய் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்களை காவலர்களும், இங்கு வரும் மக்களும் வாங்கி செல்கின்றனர். குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விற்பனையில் கிடைக்கும் தொகையானது கைதிகள் நலனுக்காக பயன்படுத்தப்படும் என சிறைத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க... தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பால் ஆபத்தானதா?