சென்னை: கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர், காவல் துறையினரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பியோடினார்.
மதுரை ஓடக்கறை திருலிங்கேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்ராஜ் (44). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி, சுந்தர் (22) என்பவரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளிவந்த அவர் தலைமறைவாகிவிட்டார். மேலும், கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளுக்கு வேல்ராஜ் ஆஜராகவில்லை. இதனால், நீதிமன்றம் அவருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், பல மாதங்களாக தலைமறைவாக இருந்த வேல்ராஜை காவல் துறையினர் நேற்று (செப். 16) சென்னையில் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னதாக,மாலை சிஎம்பிடி தலைமை காவலர்கள் சரவணன், வண்ணமுத்து ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கீழ்பாக்கம் மருத்துவமனையில் வேல்ராஜுக்கு காவலுக்காக இருந்த காவல் துறையினரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, வேல்ராஜ் அங்கிருந்து தப்பியோடினார். இது தொடர்பாக காவலர் சரவணன் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து வேல்ராஜை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் திருட முயற்சி: ஒலிபெருக்கியில் அலுவலர்கள் எச்சரித்ததால் தப்பியோட்டம்!