சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினையும், நான் முதல்வன் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் இணைய தளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, உயர்கல்வித்துறையின் பொற்காலமாக வரும் நாட்கள் நிச்சயமாக மாறும் என்பதற்கு உதாரணம்தான் நான் முதல்வன் திட்டம். கல்லூரி முதல்வர்கள் வகுப்பறைக்கு சென்று மாணவர்களை சந்தித்து உரையாட வேண்டும். துணைவேந்தர்களும் மாதம் ஒருமுறையாவது வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடத்தில் கலந்துரையாட வேண்டும்; மாணவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள இது ஏதுவாக இருக்கும்.
பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். பாடங்களுக்கேற்ப மாணவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள திறன் மேம்பாடு அவசியம். மாணவர்களை முதல்வனாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் கல்லூரி முதல்வருக்கும், துணை வேந்தர்களுக்கும் உள்ளது. உயர்கல்வி பயிலும் போதே மாணவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்த வேண்டும்.
மொழி உணர்வும் மாணவர்களுக்கு வரவேண்டும் என்ற உணர்வில், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் மொழி கட்டாய பாடமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல் என்ற அடிப்படையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாளை துணைவேந்தர்கள் கூட்டமும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது என தொிவித்தார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி